வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், 12ஆம் தேதி தமிழகம்-இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டிசம்பர் 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வருகிற 11ஆம் தேதி அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.