குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது. இதில், மக்கள் நீதிமய்யம் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் அருணாச்சலம், சவுரிராஜன், செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினர்.
பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது திமுகவின் பேரணியில் பங்கேற்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. கமல்ஹாசன் வெளிநாடு சென்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.