அமீர்
அமீர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

EXCLUSIVE | “குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன்”- இயக்குநர் அமீர்

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் பல்வேறு நாடுகளுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்திருப்பதால் இது தொடர்பான விசாரணையை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடக்கி விட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரான இயக்குனர் அமீரிடம் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த இரண்டாம் தேதி டெல்லி அலுவலகத்தில் வைத்து 11 மணி நேரங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மீண்டும் இயக்குனர் அமீரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என கேட்டு வருகின்றனர். அதுதொடர்பான ஆவணங்கள், தொழில் ரீதியான ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறும் இயக்குனர் அமீரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

முன்னதாக இந்த ஆவணங்களுடன் ஆஜராக கூறிய என்சிபி அதிகாரிகளிடம், கடந்த ஐந்தாம் தேதி கால அவகாசம் கேட்டு இயக்குனர் அமீர் இமெயில் மூலமாக கடிதம் அனுப்பியிருந்தார். அமீர் எழுதிய அக்கடிதத்தை, அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர் என சொல்லப்பட்டது. இருப்பினும் இவ்விவகாரத்தில் மீண்டும் ஆஜராக அமீருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முதல் அமீருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வரும் இந்த சலசலப்பு இதுதொடர்பாக இயக்குநர் அமீர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், “குற்றம்சாட்டப்பட்ட ஜாபரை அந்த நிகழ்விற்கு பிறகு யாரும் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நாம் அந்த வழக்கை குறித்து எதுவும் பேச இயலாது. எனக்கும் இவ்வழக்கு குறித்து எந்த தகவலும் தெரியாது. ஜாபர் சாதிக் குற்றவாளி என்பதால் என்னையும் குற்றவாளி என சொல்ல முடியாது.

இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன்.

இறைவன் மிகப்பெரியவன் படத்துக்காக ஜாபர் சாதிக்குடன் பயணித்தவன் என்ற முறையில் என்மீது சந்தேகம் விழுவதில் தப்பில்லை. ஆனால், என்னை குற்றவாளி என மீடியா ட்ரையல் நடத்துவதை ஏற்கவே முடியாது. என்.சி.பி விசாரணையை எதிர்கொள்ள முழுவதும் தயாராகவே உள்ளேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும், தேவையும் எனக்கு இல்லை. நிச்சயம் இவ்வழக்கில் என் தரப்பில் இருந்து நல்ல முடிவு வரும்” என்றார்.