தமிழ்நாடு

தொடர் கனமழை எதிரொலி: சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் மதியம் உபரிநீர் திறப்பு

Sinekadhara

சென்னை சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக இன்றிரவு கரையைக் கடக்கிறது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, தேனி, சிவகங்கையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக இன்று மதியம் 100 கன அடி  உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் பூண்டி நீர்த்தேக்கத்திலும் மதியம் உபரிநீர் திறக்கப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை புழல் ஏரியிலிருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. 21 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 17 அடிக்கு தண்ணீர் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் புழல் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியாக உள்ளது.