வடக்குப்பட்டு அகழாய்வு தளம்
வடக்குப்பட்டு அகழாய்வு தளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தொன்மையில் வாழும் காஞ்சிபுரம் வடக்குப்பட்டு... தொல்பெருமையை தன்னுள் புதைத்துக்கொண்டிருக்கும் காட்சி!

பாமா

“வெயில் பட்டு மினுங்கும் மாநிறத்தில் அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கும் நெற்கதிர்கள் அவளைப்பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன

கழுத்தில் பொன்சிவப்பு மணிகளாலான அழகிய ஆபரணத்தை அவள் அணிந்திருந்தாள்.

மண்ணைக் குழைத்து மென்மையாக்கி அழகிய வேலைப்பாடுடன் கூடிய காதணிகள்

அவளுக்கு ஏற்ற அளவில் பொருந்தி இருந்தன. மிகவும் விரும்பி அந்த காதணிகளை அவள் வாங்கியிருந்தாள்.

அவள் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.. அவளது கைகளில் தனது பிள்ளைகளுக்கு

தருவதற்காக சுடுமண் பொம்மைகளை வாங்கி வந்திருந்தாள். மகளுக்கான கண்ணாடிகளால்

ஆன மணிகளால் கட்டப்பட்ட கழுத்தணிகளை வாங்கியிருந்தாள்.

இதைப்பார்க்கும்போது மகிழ்ச்சியில் விரியும் அவர்களது முகங்களை எண்ணி மனதிற்குள் சிரித்தபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.

சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் மேற்கூரையும் ஓடுகளால் ஆகியிருந்தன. .

வீட்டிற்குள் நுழைந்ததும் தாகம் தீர்க்க, கெண்டி மூக்கு கிண்ணத்தில் இருந்து மண் குவளையில் தண்ணீரை ஏந்தி அருந்தினாள்“

இந்த காட்சிகள் விரிந்த இடம் வடக்குப்பட்டு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குப்பட்டு, தன் தொல்பெருமையை யாரும் அறியாமல் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இடம் மூன்று காலகட்டங்களை தன்னிடத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு. இந்த காலகட்டங்கள் வெளிப்பட பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

வடக்குப்பட்டு அகழாய்வு தளம்

முதலில் 1992 ஆம் ஆண்டு வடக்குப்பட்டு அருகே குருவன் மேடு என்ற இடத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. அங்கு முதுமக்கள் தாழிகள், ஈமச்சின்ன ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு மீண்டும் அகழ்வாராய்ச்சி நடந்த்து. அப்போதுதான் பல்லவர்கால வசிப்பிட பகுதி வடக்குப்பட்டில் கண்டறியப்பட்டது. மிக நீண்ட கல்தூண் கண்டறியப்பட்டதோடு, மேற்கூரையையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

சிவலிங்கம், வடக்குப்பட்டு அகழாய்வு தளம்

வழக்கமாக மேற்கூரை கிடைப்பது அரிது. அழிவுகளின்போது மேற்கூரைகள் கீழே விழுந்துவிட வாய்ப்புகள் உள்ளதால் அதன் தடயம் கிடைப்பது வெகுகுறைவே. ஆனால் வடக்குப்பட்டில் தூண் உடன் மேற்கூரையின் எச்சங்களும் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு அந்த ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான தொடர்ச்சி கிடைக்கவில்லை.

அடுத்தகட்டமாக வடக்குப்பட்டில் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேடான அந்த பகுதியில் 2023 மே மாதம் அகழ்வாய்வுப்பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது மேலும் பல தொன்மை தடயங்கள் அழுத்தமாக வெளிப்படத் தொடங்கின. இந்த பகுதியில் மூன்று காலகட்டங்கள் வெளிப்பட்டுள்ளன. இடைக்கற்காலம், சங்க காலம், பல்லவர் காலம் என மூன்று காலங்களும் வடக்குப்பட்டு என்ற புள்ளியில் இணைகின்றன. சங்ககால செங்கற்கள், பல்லவர் கால செங்கற்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன. சிவலிங்கத்துடன், விஷ்ணு, மகாலட்சுமி, அய்யனார் சிலைகள் இந்த பகுதியில் கிடைத்துள்ளன. அய்யனார் சிலை அமைந்துள்ள விதத்தைக்கொண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வடக்குப்பட்டு அகழாய்வு தளம்

மகாலட்சுமி வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்திருக்கும் காட்சியை சித்தரிக்கும் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறார். பல்லவர், சோழர் காலகட்டங்களுக்கு முன்பாக, இடைக்கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களும் வடக்குப்பட்டில் கிடைத்திருப்பதுதான் ஆச்சர்யம். இந்த இடத்தில் இடைக்கற்கால மனிதர்கள் கற்கருவிகளை செய்திருக்கிறார்கள். இந்த இடம் கற்கருவிகள் செய்யும் இடமாக இருந்திருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

அதிலும் மிகச்சிறிய கற்கருவிகள் குறிப்பாக, ஐந்து சென்டிமீட்டர் அளவுக்கு சிறிய கருவிகள் இங்கு கிடைத்திருப்பதை பார்த்தால், மிக நுட்பமான கருவிகளைச் செய்யும் தொழிற்சாலையாக இந்த இடம் இயங்கி வந்திருக்கிறது. இங்கு வந்து வாங்கிச் சென்றிருப்பதை உறுதி செய்யமுடிகிறது. வழக்கமாக வாழ்விட பகுதிகளில் காணப்படும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகளோடு, இங்கு ரோமானிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

அழகிய வளையல் துண்டுகள், சோழர்கால காசுகள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் முத்திரைகள், விளையாட பயன்படுத்திய வட்டச்சில்லுகள், மிகச்சிறிய எடைகளைக்கூடக் கணக்கிடும் எடைக்கற்கள், விலைமதிப்பற்ற அழகிய ஆபரண கற்கள் வடக்குப்பட்டில் கிடைத்திருப்பதைப் பார்த்தால் இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் நேர்த்தியான வாழ்வியலை கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

வடக்குப்பட்டு அகழாய்வு தளம்

வடக்குப்பட்டில் செப்டம்பர் மாதம் வரை அகழ்வாராய்ச்சி தொடரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரே இடத்தில் மூன்று காலகட்டங்களின் சாட்சியாக இருக்கும் வடக்குப்பட்டு இன்னும் தனது தொல் எச்சங்களை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.