தமிழ்நாடு

"எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை" - முன்னாள் அமைச்சர் தங்கமணி

Sinekadhara

"எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்" என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தற்போது அதுகுறித்து பேட்டியளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், ‘’அதிமுக அரசு எடுத்த கணக்கைத்தான் அதாவது நாங்கள் கண்டுபிடித்ததைத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் ஆய்வு செய்தபோதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது. கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என கணக்கெடுத்தோம். எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.

மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்துள்ளேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது வாய்ப்பு அளித்தால், பேரவையிலேயே விளக்கம் அளிக்கத் தயார். கடந்த அதிமுக அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்’’ என்று தங்கமணி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.