தமிழ்நாடு

விருதுநகரில் போராட்டத்தில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள் .. காரணம் இதுதான்!

Sinekadhara

விருதுநகரில் ராணுவ கேண்டீனில் முன்னாள் ராணுவத்தினருக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விருதுநரில் உள்ள இராணுவ கேண்டீனில் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கிச் சென்று பயன்பெறுகிறார்கள். கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு வீட்டிற்கு தேவையானப் பொருள்களை சரியான முறையில் தற்போது உள்ள நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இங்குள்ள ’ஓபன் சிஸ்டம்’ என்ற முறையால், அதாவது முந்தி வருபவர்களுக்கே பொருள்கள் வழங்கப்படும் என்ற ஓபன் சிஸ்டத்தால், சிலரைத் தவிர பல பேருக்கு மாதமாதம் சரியான முறையில் பொருள்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் முன்புபோல் தகவல் பலகை மூலம் வரிசை எண்கள்படி வழங்க முன்னறிவிப்பை கொடுத்து அதை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர்.

இதை பலமுறை கேண்டீன் நிர்வாகத்திடமும், கர்னல் யாதவ்விடமும் முறையிட்டு எந்தவித பயனுமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் ராணுவத்தினர்கள், விருதுநகர் ராணுவ கேண்டீன் முன்பு, வீட்டிற்கு தேவையானப் பொருள்களை வழங்காத நிர்வாகத்தையும் கர்னல் யாதவையும் கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.