தமிழ்நாடு

‘இன்று பெங்களூரு இருக்கலாம்; சென்னையை முதலிடத்திற்கு கொண்டுவருவோம்’- அமைச்சர் மனோ தங்கராஜ்

sharpana

தமிழ்நாட்டில் புதிதாக அலுவலகங்கள் அமைக்கும் நிறுவனங்கள் தடையற்ற அனுபவத்தை உணரும் விதத்தில், அவர்களுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ், உலகளவில் உள்ள உலகளாவிய திறன் மையங்களில் ( GCC ) 45% இந்தியாவில் அமைந்துள்ளதாகவும், அதில் 9% மையங்கள் தமிழ்நாட்டில் இயங்கி ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாகவும், GCC மையங்களைப் பொருத்தவரை முதலிடத்தில் பெங்களூரு இருந்தாலும், சென்னையை முதலிடத்துக்கு கொண்டுவரவும், ஓசூர், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களையும் வளர்த்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தமிழ்நாட்டில் 1.2 லட்சம் பேர் பணிபுரியும் வகையில் 190-க்கும் மேற்பட்ட GCC-க்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட GCC கொள்கை & தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப சூழலமைப்பை சந்தைப்படுத்துவது போன்றவற்றின் மூலம் GCC மையங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் புதியதாக தங்கள் அலுவலகங்களை அமைக்கும் நிறுவனங்கள் தடையற்ற அனுபவத்தை உணரும் விதத்தில் அவர்களுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் GCC-க்கள் சீரான இடைவெளியில் எளிதாக தமிழ்நாட்டுக்கு வர முடிவதுடன், சென்னையை ஒரு GCC மண்டலமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பின்னர் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயரை தகவல் தொழில்நுட்பவியல் - டிஜிட்டல் சேவைகள் என்று மாற்றுதல் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.