ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முகநூல்
தமிழ்நாடு

எத்தனையோ முகங்கள் இருந்தாலும், அவரது இந்த முகம்தான்.. அஞ்சாநெஞ்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கே.கே.மகேஷ்

மிதவாதிகளின் கட்சியாகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியில் தனது துணிச்சலான கருத்துக்களால், அதிரடிக்காரராகவும், அஞ்சா நெஞ்சராகவும் போற்றப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தாத்தா, தந்தை, தாய் என அனைவருமே அரசியலர்கள்தான் என்றாலும், அரசியலில் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார் இளங்கோவன்!

சிவாஜி ரசிகராக இருந்தபோது எம்.ஜி.ஆரை விமர்சித்தது, காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டே மூப்பனாரையும், திண்டிவனம் ராமமூர்த்தியையும் விமர்சித்தது, தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியை தூங்கவிடாமல் செய்தது, எல்லாவற்றுக்கும் மேலாக கொஞ்சம்கூட பயமேயில்லாமல் ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கிப் பேசியது என்று இளங்கோவனின் வீரதீரச் செயல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

1988: மூப்பனார்…

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்டதால், ஜானகி எம்.ஜி.ஆரால் முதல்வராகத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தால் நண்பர் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தார் அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவாஜி கணேசன். ஆனால், ராஜீவ் காந்தி அதை ஏற்காததால், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். அதில் இளங்கோவனும் ஒருவர்!

அதையொட்டி இளங்கோவன் அளித்த பேட்டியில், “எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அந்தக் கட்சியை இரண்டாகப் பிளந்து, அதில் தங்களுக்கு செளகரியமான கோஷ்டியோடு சேர்ந்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மூப்பனார் கோஷ்டியைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். தேர்தலில் நின்று ஓட்டுபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வரவேற்கலாம். இப்படி வஞ்சகமான திட்டம் மூலம் ஆட்சிக்கு வரக்கூடாது என்றோம். அவர்கள் எங்களை மிரட்டினார்கள். அதனால்தான் ராஜிநாமா செய்கிறோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என புதிய கட்சியைத் தொடங்கியபோது, “எட்டப்பனை அடக்கவந்த கட்டபொம்மன்’ என்று மூப்பனாரைத் தாக்கி, சிவாஜியை புகழ்ந்தார் இளங்கோவன். சிவாஜி கட்சியினருக்கும், இந்திரா காங்கிரஸ் கட்சியிருக்கும் இடையே நடந்த வார்த்தைப் போரில், இளங்கோவனின் நாக்கு வாளாகச் சுழன்று அடித்தது!

1991: விடுதலைப்புலிகளும், கருணாநிதியும்

சிவாஜி கணேசன் தனது கட்சியை வி.பி.சிங்கின் ஜனதா தளத்துடன் இணைத்ததால், இளங்கோவன் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி கோஷ்டியின் தளபதியானார். 1991 தேர்தலில் காங்கிரஸும், அ.தி.மு.க-வும் கூட்டணி சேர்ந்தது. தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதனால், இளங்கோவனின் கோபம் விடுதலைப்புலிகள் மீதும், அவர்களை ஆதரித்துவந்த கருணாநிதி மீதும் திரும்பியது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு கொண்டுவந்த தடா சட்டத்தின்கீழ் தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதை இளங்கோவன் வரவேற்றார்.

ஈவிகேஎஸ் , கருனாநிதி

1993: ஜெயலலிதா...

1993-இல் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முறிந்ததாலும், ஆளுநர் சென்னா ரெட்டியுடனான ஜெயலலிதாவின் மோதல் போக்காலும் ஜெயலலிதாவை விமர்சிக்கத் தொடங்கினார் இளங்கோவன்!

ஜெயலலிதா நடத்திய எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பிரதமரோ (நரசிம்மராவ்) மற்றவர்களோ கலந்துகொண்டால் அவர்கள் உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடவில்லை என்று அர்த்தம் என வாழப்பாடியாரோடு சேர்ந்து கடுமையாக விமர்சித்தார் இளங்கோவன்!

இவிகேஎஸ் ,ஜெயலலிதா

அன்டோனியா மைனோ vs கோமளவல்லி…

1996இல் மூப்பனார், ஜி.கே.வாசன்,வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டதால், சீனியரான இ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தேடிவந்தது மாநிலத் தலைவர் பதவி.

1996 -2001 வரை மாநிலத் தலைவராக இருந்தபோது, இன்றைய அண்ணாமலை போல அப்போது, அடிக்கடி பிரஸ்மீட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் இளங்கோவன்.

2001 மே 24-ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியை சந்தித்த ஜெயலலிதாவிடம், “வரும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர்… அவரை பிரதமராக்க விட மாட்டேன். காங்கிரசுக்கு ஒரு இந்தியத் தலைவர் கிடைக்காதது வெட்கக் கேடானது” என்று ஆரம்பித்து கடுமையாக விமர்சித்தார். ”இனிமேல் அவரை அவரது இத்தாலியப் பெயரான அன்டோனியா அல்பினா மைனோ என்றுதான் அழைப்பேன்” என்று சொல்லி, அதைக் கடைபிடிக்கவும் செய்தார்.

ஈவிகேஎஸ்

சாதிரீதியான விமர்சனம்!

2004இல் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இளங்கோவன் ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2006-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க அரசு அமைந்தது. கூட்டணியில் இருந்தாலும், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, அப்போது மத்திய அரசு கொடுத்த நிதியிலிருந்து தமிழக அரசு ஏராளமான தாழ்தளப் பேருந்துகளை வாங்கியது. முதல்வர் கருணாநிதியும், தி.மு.க அமைச்சர்களும் அதைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்ததுடன், அதை தி.மு.க அரசின் திட்டமாகவே பறைசாற்றிக்கொண்டார்கள். அதில் சின்னதாக JNNURM (ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்) என்ற எம்பளம் மட்டுமே இருந்தது. இதை கடுமையாக கண்டித்த இளங்கோவன் எல்லாப் பேருந்துகளிலும் இது மத்திய அரசின் நிதி உதவியில் வழங்கப்பட்டது என்று எழுத வேண்டும் என்றார்.

அதேபோல, ரேஷன் கடைகளில் ரூ.2 க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு தொடங்கியபோது, அதில் மத்திய அரசு கொடுக்கிற மானியம் எவ்வளவு என்ற பிரேக்-அப் தகவல்களைக் கொடுத்து தி.மு.க-வினரைக் கடுப்பேற்றினார். இதனால் தி.மு.க-வினர் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். பதிலுக்கு கருணாநிதியை சாதியைச் சொல்லி விமர்சித்தார் இளங்கோவன்.

அதுமட்டுமின்றி தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை வீட்டுக்கே சென்று இனிப்பு கொடுத்து பாராட்டினார். இந்தக் கோபத்தில்தான் 2009-இல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் அவரை குறிவைத்து தோற்கடித்தனர் தி.மு.க-வினர்.

மீண்டும் ஜெ-யுடன் மோதல்… முட்டை வீச்சு!

2014-இல் மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவரானார் இளங்கோவன். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டி பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான நரேந்திர மோடி, போயஸ் கார்டன் வீட்டுக்கே வந்து ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை, ‘துணை இல்லாதவர்களின் தனிமை சந்திப்பு’ என்று மிகக் கொச்சையாக விமர்சித்தார் இளங்கோவன். இதனால், 2014-இல் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவரை அ.தி.மு.க-வினர் தீயாக வேலை செய்து தோற்கடித்தார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சித்ததால், சென்னை காமராஜர் அரங்கில் வேலை பார்க்கும் பெண்ணையே மாநில தலைவர் இளங்கோவன் மீது கிரிமினல் புகார் கொடுக்க வைத்தது தமிழக போலீஸ். அந்த வழக்கில் ஒருவழியாக நிபந்தனை ஜாமீன் பெற்றார் இளங்கோவன். மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடச் சொன்னது நீதிமன்றம். அதன்படி, கையெழுத்து போடச் சென்றபோது அ.தி.மு.க மகளிரணியினர் அவரது கார் மீது முட்டை, செருப்பை வீசி போராட்டம் நடத்தியது தனிக்கதை!

ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பின்னால் சண்டை செய்ய ஆளில்லாதாலோ என்னவோ, தனது அதிரடியை கொஞ்சம் குறைத்துக்கொண்டார் இளங்கோவன். ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலினின் விசுவாசியாகவே மாறிவிட்டார். ஆனாலும், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம் போன்ற சொந்தக் கட்சி தலைவர்களை விமர்சிப்பதை அவர் நிறுத்தவே இல்லை!

ஈவிகேஎஸ்

இளங்கோவனுக்கு எத்தனையோ முகங்கள் இருந்தாலும், எதிரிகளை அவர் கையாண்ட விதம்தான் சட்டென அனைவருக்கும் நினைவுக்கு வரும்!