தமிழ்நாடு

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் வர வாய்ப்பு - ஈவிகேஎஸ் இளங்கோவன்

webteam

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் வளர்வதற்கான வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் வருவதாக இருந்தால் வரவேற்கிறேன் என்றவரிடம் மதுரையில் நிதியமைச்சர் காரின் மீது காலணி வீசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு... பாஜக என்பதன் அர்த்தம் அவர்கள் வீசிய பொருளில் இருந்து தெரிகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மின்கட்டணத்தை அதிகப்படுத்துவதற்கு மத்திய அரசுதான் காரணம். இருந்தாலும் மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டண உயர்வு இருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தற்போது வரை மதுவை ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்கிறது.

மதுப்பழக்கம் தொன்றுதொட்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் வளர்வதற்கான வாய்ப்புள்ளது. மதுக் கடைகளை மூடுவது கொள்கையாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை.

ரஜினிகாந்த்- ஆளுநரை சந்தித்து தனது அடுத்தப் படத்திற்கான விளம்பரத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ரஜினி தனது படம் வெளிவருவதற்கு முன்பும் அரசியலில் வரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்குவதுதான் அவரது வேலை.

முன்னதாக கட்சியினர் முன்னிலையில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயுவின் விலை தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் வரி விதிப்பவர்கள் மக்கள் ஏமாந்தால் தாய் பாலுக்கு கூட ஜிஎஸ்டியை போட்டு விடுவார்கள்.

தமிழக அரசியலில் ஈரோட்டிற்கு தனித்துவம் உண்டு. மதம் ,ஜாதி பெயரால் மக்களை அடிமையாக்க நினைக்கும் சர்வாதிகாரர்களை வாழவிடக்கூடாது. இந்த நாட்டில் மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் எனில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்க வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார்.