எவிடென்ஸ் கதிர் pt web
தமிழ்நாடு

“கஞ்சா வழக்கில் கைது செய்வோம்” - மிரட்டிய காவல்துறை.. அம்பலமான அத்துமீறல்.. வெளியான பகீர் தகவல்

அஜித்குமார் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், கடந்த 28ஆம் தேதி திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாரை, தனிப்படை காவலர்கள் சுற்றி நின்று பைப் மற்றும் கட்டையால் கொடூரமாக அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. குடிக்க தண்ணீர் கேட்டும் கொடுக்காமல் தனிப்படை காவலர்கள் தாக்கியுள்ளனர். கட்டைகள், பைப்புகள் உடையும் அளவுக்கு இளைஞர் அஜித்குமாரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ரௌடியிஸத்தில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை

இந்நிலையில் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பாகவும் இளைஞரின் மரணம் தொடர்பாகவும் புதிய தலைமுறையிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், “ரௌடியிஸத்தில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை. 5 காவலர்களும் இளைஞரை அடித்து கீழே தள்ளி செருப்புக் காலுடன் நெஞ்சில் மிதித்திருக்கின்றனர்; வாயில் மிளகாய் பொடியை போட்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்த்த சாட்சிகளே நம்மிடம் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையில் இப்படி தனிப்படை என்ற ஒன்றை அமைத்துக்கொண்டு டெம்போ வேனில், சீருடை அணியாமல் கூலிப்படை மாதிரி சுற்றிக்கொண்டு இருந்தால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். 5 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஆனால், இதற்கு உடந்தையாக இருந்தது யார்? இப்படி செயல்பட எங்கிருந்து அழுத்தம் வந்தது? இதையெல்லாம் விசாரிக்க வேண்டுமென்றால் சிபிஐதான் சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரிக்க வேண்டும்.

கஞ்சா வழக்கு போட்டு உனது அம்மாவை கைது செய்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஆபாசமாக பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் இறந்தவரது தம்பி சொல்லவில்லை; சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். சாட்சிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.

1 கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும்

இம்மாதிரியான காவல்நிலைய படுகொலைகளில் இறந்தவரது உடலை 2 அல்லது 3 மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மருத்துவர் அந்த மாவட்டத்தில் இருந்து வந்தால் இன்னொரு மருத்துவர் வேறொரு மாவட்டத்திலிருந்து வரவேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. அப்படித்தான் இந்த உடற்கூராய்வு செய்யப்பட்டதா? அதுமட்டுமின்று உடற்கூராய்வின்போது வீடியோ எடுக்கப்பட்டதா? எனும் கேள்விகள் எழுகின்றன.

தற்போது இந்த ஒரு வழக்கு வெளியில் வந்திருக்கிறது.. இதுபோல் வெளியில் வராமல் எத்தனை வழக்குகள் இருக்கும். காவல்துறையினரின் சித்திரவதைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது. தனிநபர் கொலை செய்தால் அதை கொலை வழக்காக பதிவு செய்கிறீர்கள். ஆனால், அரசாங்கம் கொலை செய்தால் அதை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்வதில்லை.

தற்போது இந்த ஒரு வழக்கு வெளியில் வந்திருக்கிறது.. இதுபோல் வெளியில் வராமல் எத்தனை வழக்குகள் இருக்கும்?

இந்த காவல்நிலைய மரணங்கள் தொடர்பான வழக்குகளை எல்லாம் நீதிபதிகளின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். எல்லா காவல்நிலைய கொலை வழக்குகளுக்கும் நீதித்துறையின் விசாரணைதான் சரியாக இருக்கும்; போலீஸின் விசாரணை சரியாக இருக்காது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலில் 1 கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும். கொலையில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவரிடம் 25 லட்ச ரூபாய் வசூல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை செய்து மிக விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எல்லா காவல்நிலைய கொலை வழக்குகளுக்கும் நீதித்துறையின் விசாரணைதான் சரியாக இருக்கும்; போலீஸின் விசாரணை சரியாக இருக்காது