தவெக மாநாடு நாளை நடைபெறயுள்ள நிலையில் இன்று காலை முதல் விஜய்க்கு தொடர்ச்சியாக அடிமேல் அடி விழுந்துக் கொண்டிருக்கிறது.. இவையெல்லாம் சாதரண விஷயம்தான் என்றாலும் தொடர்ச்சியாக நாற்காலி தரமுடியாது, மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறியது, மின் கம்பம் விழுந்தது, மின்கம்பி தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தது, அனுமதி இன்றி வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறபித்தது என தடைகள் நீண்டுக் கொண்டே போகிறது..
மதுரை மாவட்டம் பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு வேலைகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள், அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதேபோல விஜய் நடந்து சொல்லும் ராம்ப்வாக் மேடை, பொதுமக்கள் அமரும் பகுதிகள், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகள், வாகனத்திற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் போன்றவை முழு வீச்சில் நடந்து வருகின்றன. இம்மாநாட்டுக்கு தற்போதிலிருந்தே தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் வரத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு ஒன்றரை லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5 பேரிடம் கட்சி நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் 4 பேர் நாற்காலிகளை தரமுடியாது என தெரிவித்துள்ளனர். இதற்கு அரசியல் அழுத்தமே காரணம் என தவெகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவசரகதியாக கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதே போல இந்த மாநாட்டிற்காக மதுரையை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை தவெக மாநாட்டுக்காக இனாம் கரிசல் குளத்தில் பேனர்கள் கட்டும் பணியில் கட்சியினர் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் கல்லூரி மாணவர் காளீஸ்வரனும் அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் எடுத்து வந்த நீளமான இரும்புக் கம்பி, அங்கு இருந்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி, அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார்.
இந்நிலையில் மாநாட்டுத் திடலில் நடப்பட இருந்த சுமார் 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்திருக்கிறது. நாளை மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடி ஏற்ற இருந்த கம்பம் திடீரென கீழே விழுந்தது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்டபோது கார் மீது விழுந்தது. கிரேனிலிருந்த கயிறு கழன்றதே கொடிக்கம்பம் கீழே விழுந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக காருக்குள் யாரும் இல்லாததால் கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறுகையில், “ மதுரை மாவட்டத்தில் நாளை, பகல் நேரத்தில் வெப்பமான சூழல் நிலவும். அத்துடன் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக மாநாட்டிற்குச் செல்பவர்கள் குடைகளுடன் செல்வது நல்லது. குறிப்பாகக் கருப்பு நிறக் குடைகளை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் கருப்பு நிற குடைகள் பகல் நேரத்தில் அடிக்கும் வெயில் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உடையது. இதனால் மற்ற நிறக் குடைகளை எடுத்துச் செல்வது நல்லது” என்றும் கூறினார்.
மதுரையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது போல இன்று காலை முதலே தவெக தலைவரும் தொண்டர்களும் மாநாட்டிற்காக வேலை செய்பவர்களும் தொடர்ச்சியாக பலவிதமான தடைகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..