தமிழ்நாடு

கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் நிகழ்வு-பெற்றோர் உறவினருக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவர்கள்

webteam

திருச்சி மணப்பாறை அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் உறவினர்களுக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 278 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவியர்களிடையே பொது சிந்தனை, நல்லறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் டி.ராஜசேகரன், அவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி தந்து வருகிறார். அவ்வகையில் மாணவ மாணவியர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் அனைத்து மாணவ மாணவியர்கள் இந்திய அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட இன்லேண்ட் லெட்டரில் அவரவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதினர். மாணவ மாணவியர்கள் எழுதிய கடிதங்களில் அவர்களுக்கு வீட்டில் கிடைக்கின்ற அன்பு, நல்ல விஷயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தனர். சில மாணவர்கள் தங்களது தந்தைக்கு அவர்கள் செய்கின்ற தவறுகள், போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதையும், வாகன சட்டங்களை மதித்து தலை கவசம் அணிவதையும் வலியுறுத்தி இருந்தனர்.

சிலர் தாங்கள் படித்து, அடையக்கூடிய குறிக்கோள் குறித்தும் பெற்றோர்களுக்கு தெரிவித்திருந்தனர். இந்த முயற்சி தவறான வழியில் செல்லும் பெற்றோர்களை நல்வழிப்படுத்தும் கேடயமாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் நம்புகின்றனர்.