பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சாலை பாதுகாப்பு நிறுவனம் ஆகியவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகளிர்க்கான இலவசமாக விடப்பட்ட பேருந்துகளில் அதிக அளவு பெண்கள் பயன்பாடு இருக்கிறது. 19,206 பேருந்துகளில் கொரோனா காரணமாக 15,227 பேருந்துகள் இயக்கப்படுகிறது. படிப்படியாக அவை அதிகரிக்கப்படும். மலைப் பகுதிகளில் 498 பேருந்துகளும், சென்னையில் மட்டும் 2,650 மாநகர பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக ஏசி பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் 2,000 புதிய டீசல் பேருந்துகள் வாங்க உள்ளதாகவும், டீசல் உபயோகத்தை குறைப்பதற்காக எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும் எனவும் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டியில் மாநகர பேருந்து பணிமனை அமைய 4 ஏக்கர் 70 சென்ட் நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வரிடம் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை கூடுதலாக இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து முதல்வரிடம் பேசி வருவதாகவும் கூறிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பயணிகளின் பயண சீட்டு விலை உயராது எனவும் அதே நேரத்தில் காலப்போக்கில் அது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிநிரந்தரம் பொறுத்தவரையில், 7,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புதிய பணியாளர்களை சேர்க்க உள்ளதாகவும் கொரோனாவுக்கு முன்பு ஒரு கோடியே 60 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது அது 90 லட்சம் ஆக குறைந்து விட்டது எனவும், கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும், தனியார் பள்ளிகளை திறந்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.