தமிழ்நாடு

விழுப்புரம்: தேடப்பட்டு வந்த கொரோனா நோயாளியை பொதுமக்கள் உதவியுடன் கண்டுபிடித்த போலீஸ்

webteam

விழுப்புரம் அரசு தேடப்பட்டு வந்த கொரோனா நோயாளியை பொதுமக்கள் அடையாளம் காட்டியதின் பேரில் போலீசார் மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 7-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக்கூறி அனுப்பப்பட்டார். ஆனால் பின்னர் வந்த சோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதால் அவரைத் தேடும் பணி தொடங்கியது. போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தினசரி விளம்பரம் செய்தும், போஸ்டர்கள் ஒட்டியும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே லாரி ஷெட்டில் தங்கியிருந்த அவரை பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் போலீசார் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “7ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து அவரை தேடி வந்தோம். நேற்று கூட தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் சுவரொட்டிகள் அடித்து அவருடைய புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தோம். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை பார்த்து எங்களுக்கு தகவல் அளித்திருந்தனர். அதன்பேரில் அவரை தற்போது அழைத்து வந்திருக்கிறோம்.

அவருடன் நான்கு வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும் இவர்கள் வடமாநிலங்களுக்கு தப்பிச்செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது அவரை கைது செய்துள்ளோம். வழக்குப்பதிவு செய்யப்படுமா என்று பின்னர் அறிவிக்கப்படும். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.