மின்சாரம் தாக்கி இளைஞர் பலி pt desk
தமிழ்நாடு

ஈரோடு | தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி – போலீசார் விசாரணை

தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடததி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: டி.சாம்ராஜ்

ஈரோடு அடுத்த பெருந்துறை புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக்குமார் (30), ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இவர், தனது நண்பர்களுடன் தாளவாடி அடுத்த தர்மாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பர் கனிஷ்கர் தங்கும் விடுதியின் முன்புறம் இருந்த கம்பியில் துணியை உலர வைத்துள்ளார். அப்போது அந்தக் கம்பியில் மின்சாரம் வந்ததாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

Death

இதனை நண்பர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், சிறிது நேரத்துக்குப் பின் தீபக்குமார் அந்த கம்பியை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த இளங்கோ என்ற நண்பர் தனது காலணியால் மின்சார கம்பியை அடித்து விலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடனே தனது காரில் தீபக்குமாரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், தீபக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தீபக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீசார், தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.