தமிழ்நாடு

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது தவறுதான்: மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட தலைமைஆசிரியர்

நிவேதா ஜெகராஜா

பாலியல் தொந்தரவளித்த ஆசிரியர்மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக, எல்லோர் மத்தியில் மன்னிப்பு கேட்டுள்ளார் ஈரோடு மாவட்ட பள்ளியொன்றின் தலைமை ஆசிரியர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்திலுள்ள அரசு பள்ளியின் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி. இவர் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ நேற்று மாலைக்குப்பின் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த ஆசிரியர் குறித்து ஏற்கெனவே பல மாணவர்களும் பெற்றோர்களும் பலரும் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்திருந்ததாகவும், எந்த புகாருக்கும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறிப்படுகிறது. ஆகவே ‘தலைமை ஆசிரியரை கைதுசெய்க’ என வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்தி: பாலியல் புகார் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

இருப்பினும் அவரை கைது செய்ய வேண்டுமென மக்களும் மாணவர்களும் கோஷம் எழுப்பினர். சுமார் 1 மணிநேர வாக்குவாதத்தை அடுத்து அங்கு கூடியிருந்த அனைவரின் மத்தியிலும் தலைமை ஆசிரியர் கனேசன் மன்னிப்பு கேட்டார். ‘பள்ளிக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாதென நினைத்தே இதை மறைத்தேன். நடவடிக்கை எடுக்கவும் தவிர்த்திருந்தேன். அதற்கு இன்று என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நானும் என்னுடைய செயலுக்கு உங்கள் எல்லோர் முன்பும் மன்னிப்பு கோருகிறேன்’ எனக்கூறினார் அவர். இதனையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அனைவரையும் காவல்துறையினர் வெளியேற்றினர்.