துணை வட்டாட்சியர் உள்ளிட்ட இருவர் கைது  pt desk
தமிழ்நாடு

ஈரோடு: பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் - துணை வட்டாட்சியர் உள்ளிட்ட இருவர் கைது

ஈரோடு அருகே பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ, துணை வட்டாட்சியர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர், பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையத்தில் தனது தாயின் பெயரில் உள்ள இடத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்ய பெருந்துறை துணை வட்டாட்சியர் நல்லசாமியை அணுகியுள்ளார். அப்போது அவர், பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய 15 ஆயிரம் ரூபாயை பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமாரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

Arrested

இதனை தொடர்ந்து தனசேகரன், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியரிடம் வழங்கிய போது இருவரையும் பிடித்த போலீசார், 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர் பட்டா மாறுதல் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் மற்றும் பெருந்துறை துணை வட்டாட்சியர் நல்லசாமி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.