தமிழ்நாடு

தோட்டத்தில் புகுந்த யானையை விரட்டிய விவசாயிக்கு நேர்ந்த சோக முடிவு

தோட்டத்தில் புகுந்த யானையை விரட்டிய விவசாயிக்கு நேர்ந்த சோக முடிவு

kaleelrahman

தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனத்தை ஒட்டியுள்ள தொட்டகாஜனூரைச் சேர்நந்தவர் மல்லப்பா (70) விவசாயி. இவர், தர்மாபுரத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இவரது தோட்டத்தில் தினந்தோறும் ஒற்றை காட்டுயானை புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்றிவு வழக்கம்போல வாழை தோட்டத்துக்கு வந்த யானை, 500-க்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. அப்போது இரவு காவலுக்கு சென்ற மல்லப்பா, யானையை சப்தம் போட்டு துரத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த யானை மல்லப்பாவை தூக்கி வீசியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி சிவம்மா, மகன் சித்துமல்லு, மகள் ரேகா ஆகியோர் தோட்டத்துக்குச் சென்று பார்த்தனர். அப்போது யானை தாக்கியதில் மல்லப்பா உயிரிழந்தது தெரியவந்தது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக விவசாய பயிர்களை யானை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மல்லப்பாவின் உடலை அதே இடத்தில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.