தமிழ்நாடு

”ரூ.94 ஆயிரம் பில்லா..!”.. 100 யூனிட் கூட மின்சாரம் பயன்படுத்தாத குடும்பத்திற்கு அதிர்ச்சி

webteam

சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.94,985 என குறுஞ்செய்தி வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா. கூலி தொழிலாளியான இவர் மனைவி காளி மற்றும் தனது குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகிறார். வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு பெற்றுள்ளார். சமீப காலமாக தனது வீட்டில் இரண்டு மாதத்திற்கு நூறு யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார் ரேவண்ணா.

100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் இதுவரை ரேவண்ணா மின் கட்டணம் செலுத்தியது இல்லை. இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மின் கட்டணம் ரூ.94,985 செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இது குறித்து சத்தியமங்கலம் கோட்ட மின் செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் விசாரணை மேற்கொண்டு புகார் குறித்து மின் இணைப்பு மீட்டரை ஆய்வு செய்தனர். அதில் மின்வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக பதிவாதாகவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து ரேவண்ணா நிம்மதி அடைந்தார்.