செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி விஜயநகரத்தில் தோட்டத்து வீட்டில் ராமசாமி (75)-பாக்கியலட்சுமி (60) தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களின் மகன் ரவிசங்கர், மகள் பானுமதி முத்தூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு ரவிசங்கர், தனது பெற்றோரை செல்போனில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் போனை எடுக்காத நிலையில் உறவினர்களை சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.