தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: எத்தனை சதவீத வாக்கு பதிவாகியுள்ளது?

PT

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் அளித்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மணி நிலவரப்படி, 74 புள்ளி 69 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டன. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 5.30 மணிக்கு மேல், 6 மணி வரை வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் அளித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்காணோர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக இன்று நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், 6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.