ஈரோடு கிழக்கு தொகுதியின் 237 வாக்குச்சாவடிகளிலும், மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைச் செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்படும் என்றும், அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலேயே இது நடைபெறும் எனவும் தெரிவித்தார். இந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக எழுந்த புகாருக்கு பதில் அளித்த அவர், அதற்கு வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக கூறினார். தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.