தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று நமது தொகுதி அலசல் பகுதியில் நாம் காணவிருப்பது கொங்கு மண்டலத்தின் இதயமாகத் திகழும் ஈரோடு மாவட்டம். பெரியார் பிறந்த
மண், மஞ்சள் மாநகரம், ஜவுளிச் சந்தை எனப் பல பெருமைகளைக் கொண்ட ஈரோட்டின் 8 தொகுதிகள் குறித்து
பார்க்கலாம்.
ஈரோடு - 1979-இல் கோவையிலிருந்து பிரிந்த இந்த மாவட்டம், இன்று தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முதலில் மாநகரப் பகுதிகள். ஈரோடு கிழக்கில் முதலியார் மற்றும் சிறுபான்மையின வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. 2025 இடைத்தேர்தலில் திமுக இங்கு தனது கொடியை நாட்டியுள்ளது. மறுபுறம், ஈரோடு மேற்கில் மூத்த அமைச்சர் சு.முத்துசாமிக்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசலும், வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புமே இங்கு பிரதானப் புகார்கள் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதி கோபிசெட்டிபாளையம். 1977 முதல் இன்றுவரை, 1996-ஐத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் இங்கு இரட்டை இலையே வென்றுள்ளது. 'குட்டி கோடம்பாக்கம்' என அழைக்கப்படும் இந்தத் தொகுதியில், கே.ஏ.செங்கோட்டையனை வீழ்த்த திமுக பலமுறை முயன்றும் அது சவாலாகவே உள்ளது. இப்போது தவெக வேட்பாளராக களமிறங்குகிறார் செங்கோட்டையன்.
கூடுதுறை சங்கமேஸ்வரர் வீற்றிருக்கும் பவானி, அதிமுகவின் கோட்டையாகத் திகழ்கிறது. இங்கு வன்னியர் மற்றும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். அந்தியூர் தொகுதியோ, ஆசியாவிலேயே புகழ்பெற்ற குதிரைச் சந்தைக்குப் பெயர்பெற்றது. இங்கு கடந்த முறை திமுக வெற்றி பெற்றாலும், அதிமுக தனது செல்வாக்கை மீட்டெடுக்கத் தீவிரமாக உள்ளது. விவசாயமும் தொழிலும் கலந்த பெருந்துறையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு காலத்தில் பலமான வாக்கு வங்கி இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இங்கு அதிமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது.
சிப்காட் கழிவுநீர் மற்றும் நிலத்தடி நீர் மாசு இங்கு மிகப்பெரிய தேர்தல் காரணியாக உருவெடுத்துள்ளது. மொடக்குறிச்சியில் கடந்த முறை பாஜக வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் வாக்குகள் இங்கு மிக முக்கியம். தனித்தொகுதியான பவானிசாகர், ஆசியாவின் மிகப்பெரிய மண் அணையைக் கொண்டுள்ளது. இங்குஅருந்ததியர் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. 2021-இல் அதிமுக வென்ற இந்தத் தொகுதியில், இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.