தமிழ்நாடு

கடனுக்காக நிலம் அபகரிப்பு? - நடவடிக்கை கோரி காவலர்கள் காலில் விழுந்து கதறிய வியாபாரி

கடனுக்காக நிலம் அபகரிப்பு? - நடவடிக்கை கோரி காவலர்கள் காலில் விழுந்து கதறிய வியாபாரி

kaleelrahman

ஈரோட்டில் 40 லட்சம் ரூபாய் கடனுக்காக 8 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக தனியார் நிதி நிறுவனத்தினர் மீது இரும்பு வியாபாரி புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் புதூரை சேர்ந்தவர் இரும்பு வியாபாரி ஈஸ்வரமூர்த்தி. இவர், மூலபாளையத்தில் பைனான்ஸ் நடத்திவரும் பழனிச்சாமி, மைதிலி தம்பதியினரிடம் கடந்த 2014ஆம் ஆண்டு, 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக இவருக்கு சொந்தமான 45 சென்ட் நிலத்தை அடமானமாக ஈஸ்வரமூர்த்தி எழுதிக்கொடுத்துள்ளார். இதையடுத்து 40 லட்சம் ரூபாய் கடனுக்கு, மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக வட்டி செலுத்தாத நிலையில், தனது நிலத்தை நிதி நிறுவனத்தினர் அபகரித்துவிட்டதாக ஈஸ்வரமூர்த்தி பலமுறை புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ராமலிங்கம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் தூண்டுதலால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்.

இதையடுத்து தனது மனைவி குழந்தைகளுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற ஈஸ்வரமூர்த்தி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்கிருந்த காவலர்களின் காலில் விழுந்து கதறி அழுதார். அவரின் மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் டிஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.