தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: ஒரு குடத்துக்கு சண்டையிட்ட இரு பெண்கள் - கனிமொழி பரப்புரையில் சலசலப்பு

webteam

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கனிமொழியின் கூட்டத்துக்கு வந்த பெண்கள் சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த கூட்டத்துக்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்குவதாகக் கூறி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கனிமொழி வருவதற்கு சற்று தாமதமானதால் கூட்டத்துக்கு வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது. வரிசையாக பெண்களுக்கு குடம் வழங்கிய நேரத்தில் அனைவரும் ஒரிடத்தில் குவிந்ததால் குடம் கொடுக்க முடியாமல் திணறினர். இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி முடியாத திமுகவினர் சில்வர் குடம் அடங்கிய சிமெண்ட் சாக்கு பையை வீசியெறிந்தனர்.

இதையடுத்து குடத்தை எடுக்க பெண்கள் போட்டி போட்டு முண்டியடித்துக் கொண்டு சில்வர் குடங்களை எடுத்தனர். அதில் ஒரு குடத்துக்கு இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். குடம் இல்லாதவர்களுக்கு சிலர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது. சில்வர் குடத்துக்கு பெண்கள் சண்டை போடுவதை அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தனர்.