ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமியும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 46 வேட்பாளர்கள் உள்ளனர். இருமுனை போட்டி நிலவும் நிலையில், அனல் பறக்கும் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. வரும் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கட்சியினரிடையே மோதல்
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியார் குறித்த துண்டுபிரசுரம் விநியோகித்த போது நாதக மற்றும் தபெதிக இடையே நேரிட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை தாக்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் நாம் தமிழர் கட்சியினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியார் மீது அவதூறு பரப்புவோரை புறக்கணிக்கக் கோரி பன்னீர் செல்வம் பூங்கா அருகே துண்டு பிரசுரம் விநியோகித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து இருதரப்பினரின் புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.