பவானிசாகரில் மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்க அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி கார் நிறுத்துமிடமாக மாறியுள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்கவும்,
நடமாட்டத்தை கண்காணிக்கவும் பவானிசாகர் அடுத்த காராட்சிக்கொரை வன எல்லையில் கடந்த மார்ச் மாதம் சோதனைச்சாவடி
திறக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணி
மேற்கொள்வார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறியிருந்தார்.
பொதுமக்கள் போர்வையில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் வகையில், அறிவியல் தொழில்நுட்பத்துடன் 24 மணி நேரமும்
இச்சோதனைச்சாவடி செயல்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சோதனைச்சாவடி அடிக்கடி மூடப்பட்டு கிடப்பதால், அதனை
சுற்றுலாப் பயணிகள் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சோதனைச்சாவடி கார் நிறுத்துமிடமாக மாறி வருவதை கண்டு
அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள சுற்றுவட்டார மக்கள், மாவோயிஸ்ட்டுகளும் சமூக விரோதிகளும் ஊடுருவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக
அச்சம் தெரிவிக்கின்றனர்.