செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லால் என்பவரின் 17 வயது மகன் ஓம்பிரகாஷ், ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ந்து தனது செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை ஈரோட்டில் தங்கியுள்ள உறவினர் நரேஷ் என்பரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து விளையாடி வந்த சிறுவனின் செல்போன் பழுது ஏற்பட்ட நிலையில், அதனை உறவினர் நரேஷ் சரிசெய்து கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த சிறுவன் கோபித்துக்கொண்டு கடந்த 30ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், நரேஷ் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் ஓம்பிரகாஷ் காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் சங்ககிரி வரை நடந்தே சென்றது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பழுதான செல்போனை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூருக்கு பேருந்திலும் அங்கிருந்து உத்திரபிரதேசத்திற்கு ரயிலிலும் சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள சாமியார் ஆசிரமத்தில் தங்கியுள்ளதை கண்டறிந்து காவல்துறையினர் உதவியுடன் சிறுவனை மீட்டு ஈரோடு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.