ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பிற நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கியது. அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 12 முதல் தடுப்பூசி திருவிழா துவங்கியது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனி வார்டு அமைத்து கோவாக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட வருவோர் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். புஞ்சை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை மொத்தம் 1427 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புஞ்சை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக்சின் தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லை. இதனால் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஏப்ரல் 14 முதல் கோவாக்சின் தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லை. மாவட்ட மருத்துவமனையில் கேட்டுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் வந்து விடும். மருந்து வந்தவுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் மருந்து தட்டுப்பாட்டால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.