சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு இடம் அளிப்பது குறித்து அரசுதான் சட்டம் இயற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மனிதி என்ற அமைப்பு சேர்ந்த முத்துசெல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. சட்டமன்றத்தில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஆகையால் சட்டப்பேரவையில் சமபாலினத்தை நிறுவ நீதிமன்றம் மாநிலஅரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ பெண்களுக்கு சம அளவில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.
இதனையடுத்து பேசிய தலைமை நீதிபதி “ பெண்களுக்கு சமஅளவில் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.