தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு சென்றதையடுத்து அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். இதையடுத்து, திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தவிர்த்த மற்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (அக்டோபர் 6) நடைபெறவிருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில், தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் இடதுசாரி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் தான், பரப்புரை இன்று மாலை நிறவடையவிருக்கிறது. இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்திற்கும்-அதிகார துஷ்பிரயோகத்திற்கும் தக்க பதிலடி கொடுத்தார்கள் என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசுவாசத்திற்கு மூடுவிழா நடத்தி, துரோசுத்திற்குப் பெயர்போன, த.வெ.க சார்பில் மீண்டும் போட்டியிடும் துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், வருகின்ற 6.10.2026 அன்று நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் திருமதி கணிதா சம்பத் அவர்களுக்கும், தாராபுரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் அன்புச் சகோதரி திருமதி K. பானுமதி அவர்களுக்கும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, த.வெ.க, தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இருவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திடுமாறு வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
"மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்திற்கும்-அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இனி யாருக்கும் துரோக சிந்தளை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள்" என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.