தமிழக மின்வாரியம் ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்தது மெகா ஊழல் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதனால் மின்வாரியத்தின் நிதிநிலை மோசமடையும் என்றும், மின்கட்டண உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
தமிழகத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35 விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனில் உள்ள மின்வாரியத்தின் நிதிநிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும், இதே நிலை நீடித்தால் மின்கட்டண உயர்வுக்கான சூழல் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் திமுக ஆட்சியில் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை விலையில் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்ததாகவும், தற்போது ஏன் இவ்வளவு விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் ரூ.7-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரத்தை, தவெக அரசு இன்று ரூ.35-க்கு வாங்கி மெகா ஊழல் செய்வதாகும். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்தார்கள். இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்பு 5 நிமிட பயணத்தில் கொத்து பரோட்டா போட்டதாக கிண்டல் செய்த தவெக தலைவர் விஜய், இப்போது டீக்கடை, டிராக்டர் ஓட்டுவது என தெருத்தெருவாக அலைந்து திரிந்து இடைத்தேர்தலில் வெறும் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் பணபலத்துடன் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.
மேட்டூர் தண்ணீர் கடைமடை செல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் தண்ணீர் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்த அவர், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் இப்போதிலிருந்தே பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.