எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

“உறுதியாக சொல்கிறோம்... பாஜகவுடன் கூட்டணி இல்லை” – குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்!

webteam

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் திமுக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 10,000 பேர் அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார். அதன் விவரம் பின்வருமாறு...

‘திமுக ஆட்சி, ஊழல் ஆட்சியாக உள்ளது’

“கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில்தான், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தன. அப்போது அதிமுக ஆட்சியில் போட்ட விதைகள்தான் புதிய தொழிற்சாலைகள். ஆனால் திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பைகளுக்கு கூட வரி போட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் மக்களைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. இதற்கு ஒரே தீர்வு அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.

திமுக ஆட்சி கார்ப்பரேட் கம்பெனி, ஊழல் ஆட்சியாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை போல், திறமை இல்லாத முதலமைச்சராக உள்ளார்”

‘மக்களுக்காக என்ன செய்தார்கள்?’

“தமிழகத்தில் இன்று முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை, கடந்த மாதம் முதலீட்டாளர் மாநாட்டு நடத்தி முதலீடுகள் பெறப்பட்டதாக சொன்னார்கள். இந்த நிலையில் நம்முடைய முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டுக்கு முதலீடு ஈர்க்கச் சென்றார். அங்கு சென்று தமிழக தொழில் முனைவர்களை அழைத்து முதலீடு பெற்றதாக சொல்கிறார். ஆனால் ‘முதலமைச்சர் கொள்ளை அடித்த பணத்தை அங்கு போட சென்றார்’ என மக்கள் பேசுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், அதிமுகவை பற்றி பேசுவதே வேலையாக கொண்டுள்ளனர். மக்களுக்காக என்ன செய்தார்கள்?

‘அதிமுக-விற்கு துரோகம் செய்வோர்...’

“திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தற்போது நீதிமன்றம் தூசி தட்டி எடுத்து விசாரித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சட்டப்பேரவையில் முன் வரிசையில் அமரும் பலர் எங்கு இருப்பார்களோ அங்கிருப்பார்கள்.

minister senthil balaji
அதிமுகவிற்கு துரோகம் செய்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவரை போல அதிமுகவிற்கு துரோகம் செய்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்”

‘அதிமுக - பாஜக கூட்டணி இல்லை!’

“அதிமுக, பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் உள்ளது என்று இன்றைக்கு பல பேர் பேசுகிறார்கள். திமுகவினர் திட்டமிட்டு இதுபோல பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றனர். ஏற்கெனவே நாங்கள் தீர்மானம் போட்டு பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.

இன்று உறுதியாக சொல்கிறோம். பாஜகவுடன் கூட்டணி இல்லை

இனி பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்கிற கேள்வியை கேட்க வேண்டாம். அதிமுகவில் தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்”

‘கடனில் முதல் இடம் தமிழகத்துக்குத்தான்...’

“அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. மக்களை நேசிக்கிற கட்சி. அதிமுகவுக்கு விசுவாசமாக உண்மையாக உழைத்தால் தலைமை பொறுப்புக்கு வரலாம். இன்றைய திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அந்த திட்டத்திற்காக குழு அமைக்கப்படுகிறது. இதுவரையில் 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அதிக கடன் என்று சொன்னார்கள். ஆனால் இன்று இந்தியாவில் 2.50 லட்சம் கோடி கடன் வாங்கி முதல் இடத்தில் உள்ளது தமிழகம்தான்”

‘ஆ. ராசா டெபாசிட் இழப்பார்’

“திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையெனில் அதிமுக தொண்டர்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசா டெபாசிட் இழப்பார்” என பேசினார்.