தமிழ்நாடு

அதிமுக அலுவலகம் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு சொத்து இல்லை-கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

webteam

தான் என்ற அகங்காரத்தோடு இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது செயல்பாட்டால் தான் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது என்றும், நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறும் பச்சோந்தியாக இருக்கிறார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வர இருப்பதால் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ”ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் வருவதை ஒட்டி, தொண்டர்கள் அதிக அளவு கூட இருப்பதால் பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபியிடம் மனு அளித்தேன். கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் நாளை பொதுக்குழுவை கூட்ட தேதி அறிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். அவரே கட்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். கட்சியை பாதுகாக்க வேண்டியது ஓபிஎஸ்-ன் கடமை. கட்சியை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் ஓபிஎஸ்ஸிடம் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் அவர் தலைமைக் கழகத்திற்கு வருவார்” என்றார்.

தொடர்ந்து பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ”அதிமுக அலுவலகம் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு சொத்து இல்லை. அதிமுக தொண்டர்களுடைய வியர்வை சிந்திய உழைப்பில் உருவானது. நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறும் பச்சோந்தியாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி, கே பி முனுசாமி மற்றும் ஜெயக்குமார் மூவருக்கும் என்ன தகுதி இருக்கிறது. தான் என்ற அகங்காரத்தோடு இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலின் போது தனது செயல்பாட்டால் தேமுதிகவிற்கு தேர்தலில் சீட்டு கொடுக்காமல் போனதால் கூட்டணியில் இருந்து பிரிந்தார்கள், அதனால் தற்போது தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கே பி முனுசாமி குறித்து பேசுகையில், ”பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு மறைமுகமாக அனுமதி பெற்றுள்ள கே பி முனுசாமி திமுகவில் கள்ளத்தொடர்பில் இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தாரைவார்த்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார் கே பி முனுசாமி” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “விரைவில் ஓபிஎஸ் 50 ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் அதிமுக தலைமை கழகம் வருவார். ஒண்ட வந்தவர்கள் ஊர்காரர்களை துறத்தியது போன்று ஒண்ட வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி தொண்டர்களாகிய எங்களை விரட்ட பார்ப்பது நடக்காது” எனவும் தெரிவித்தார்.