2019 முதல் 2026 வரை தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை முன்னிறுத்தி, இபிஎஸ் தலைமையை குறிவைத்து எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினர் கிளர்ச்சி காட்டும் சூழலில், 26 மாவட்ட செயலாளர்களை நீக்கி புதியவர்களை நியமித்த இபிஎஸ், ராயப்பேட்டை தலைமையகத்தில் ஆலோசனை நடத்துகிறார். பொதுக்குழு கூட்டம், எம்.எல்.ஏ ஆதரவு என இரு தரப்பும் அதிகாரப் போரில் இறங்கியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பொன்விழா கண்ட அதிமுகவில், சி.வி. சண்முகம், எஸ்.பி வேலுமணி தரப்புக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமியின் தரப்புக்கு இடையே கடுமையான உட்கட்சிப் பூசல் நடந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக கே. பழனிசாமி பதவியேற்றது முதல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை 11 தோல்விகளை அதிமுக சந்தித்திருப்பதாக எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கூறுவதுடன், கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுகவை தக்க வைக்கும் நோக்கில் தனக்கு எதிராக செயல்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டியிருந்த இபிஎஸ். இத்தேர்தல் தோல்வியின் மூலம், மற்றுமொரு அக்னிப் பரீட்சைக்கு தயாராகி இருக்கிறார். எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தரப்பினர், சட்டப்பேரவைத் தலைவராக அதிமுக இபிஎஸ்-க்கு எதிராக எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து அவைத் தலைவரிடம் மனு அளித்திருக்கின்றனர். அதேபோல, தவெகவின் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வின் போதும், இத்தரப்பு 25 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு வாக்களித்தது இபிஎஸ் தரப்பிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன்மூலம், கே. பழனிசாமி தரப்பிடம் 21 எம்.எல்.ஏ-க்களே இருப்பது தெரியவருகிறது. இந்தசூழலில் தான், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் கட்சிப் பதவியை பழனிசாமி பறித்துள்ளார். தொடர்ந்து, அவர்களுக்கு பதிலாக 26 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து இருக்கிறார். அதேசமயம், அதிமுகவில் 2,400 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்களில் 5-ல் ஒருபங்கு உறுப்பினர் ஆதரவு கிடைத்தாலே பொதுக்குழுவை கூட்ட முடியும். எனவே, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழுவைக் கூட்டும் முயற்சியில் எஸ்.பி. வேலுமணி தரப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில்தான், இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 26 மாவட்ட செயலாளர்கள் உட்பட அக்கட்சியின் மாவட்ட செயலாலர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனையின் ஈடுபட்டிருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பின் முதன்முறையாக இபிஎஸ் அதிமுக தலைமை அலுவலத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி. வேலுமணி தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரா? அல்லது ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.