பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததற்கு முக ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ் pt
தமிழ்நாடு

ஆசிரியர் இறந்துவிட்டார்.. ஆனால் முதல்வர் "Vibe" செய்து கொண்டிருக்கிறார்! - EPS கண்டனம்

சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Rishan Vengai

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

ஏழு நாட்களாக 17 ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்து சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். அப்பொழுது அங்கு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனளிக்காமல் பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்தார்.

உயிரிழந்த பகுதி நேர ஆசிரியர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே என்.புதூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராடிய பகுதிநேர ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதற்கு கடுமையான கண்டனங்களை வைத்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே.. இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு..

உயிரிழந்த திரு.கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்..

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி ஆசிரியர் கண்ணன் இறந்த செய்தி வருத்தமளிக்கிறது. எத்தனை கடினமான சூழலில் இருந்திருந்தால் தற்கொலை முடிவுக்கு கண்ணன் தள்ளப்பட்டிருப்பார்? வாக்குறுதி நிறைவேறும் எனக் காத்திருந்த ஆசிரியர்களுக்கு திமுக செய்தது நம்பிக்கை துரோகம்” என கூறியுள்ளார்.