எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

”விளையாட்டு பிள்ள மாதிரி பண்ணாத!” - ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணமா?.. வேட்பாளருக்கு ஈபிஎஸ் அறிவுரை!

Angeshwar G

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து அவர்களுக்காக பிரச்சாரப் பணிகளையும் தொடங்கிவிட்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தொகுதிப்பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக - தேமுதிக கூட்டணி | மக்களவை தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் பெரிய சோரகை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை களம் விறுவிறுப்படைந்துள்ளது நேற்று முன்தினம் திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அதிமுக பரப்புரையும் திருச்சியில் இன்று தொடங்க உள்ளது.

இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.

தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பரப்புரையை தொடங்கினார்.

இன்று மாலை திருச்சியில் பரப்புரை தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அதன் முன்னோட்டமாக சேலம் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், வேட்பாளர் விக்னேஷ்க்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அப்போது வேட்பாளர் பணம் கொடுக்க முற்படுகையில், எடப்பாடி பழனிசாமி தடுத்தார். தொடர்ந்து வேட்பாளரிடம், “பணத்தை பாக்கெட்ல வச்சிக்காத. விளையாட்டுப் பிள்ளை மாதிரி பண்ணாத. பாக்கெட்லயே பணம் இருக்கக்கூடாது” என தெரிவித்தார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.