தமிழ்நாடு

``அதிமுக நிர்வாகிகளை பழிவாங்க திமுக அரசு துடிக்கிறது”- இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். கூட்டறிக்கை

``அதிமுக நிர்வாகிகளை பழிவாங்க திமுக அரசு துடிக்கிறது”- இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். கூட்டறிக்கை

நிவேதா ஜெகராஜா

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களின் கூட்டறிக்கை வழியாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் சகோதரர் வேலுமணி துடிப்புடன் செயல்பட்டு கட்சிப் பணிகள் ஆற்றியிருந்தார். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களின் திமுக-வினர் மேற்கொண்ட முறைகேடுகளையும் வீரத்துடன் எதிர்த்துப் போராடியிருந்தார் அவர். அதை முடக்கிப் போடவே, அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைகள் நடத்தப்படுகின்றது.

அதிமுக நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க திமுக அரசு துடிக்கிறது. ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர் வேலுமணி. அதிமுக-வின் உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவரான வேலுமணி, திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறுதும் தொய்வடைந்து விடமாட்டார். அவரது மக்கள் தொண்டு, தொய்வின்றி தொடரும் என்பதை கட்சி உறுப்பினர்களும், கோவை மக்களும் நன்கு அறிவர். திமுக அரசின் தீய முயற்சிகளை முறியடித்து சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அதிமுக விளங்குகிறது. இனியும் வெல்லும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளனர்.