செய்தியாளர்:V.M.சுப்பையா
எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறி அந்த படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு, தனி நபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கூறினார். மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத் துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.