எண்ணூர் கழிமுகப்பகுதியில் கழிவுகள் கலப்பால் வாழ்வதே கடினமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் பழவேற்காடு ஏரியையும், தெற்கில் கொசஸ்தலை ஆற்றுடனும் இணைக்கின்ற பகுதியாக எண்ணூர் கழிமுகப்பகுதி உள்ளது. பூண்டி ஏரியின் மிகுநீர் வடியும் பகுதியாகவும் உள்ள இந்த இடத்தில், வடசென்னை அனல்மின்நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையங்கள் உள்ளன. கொசஸ்தலை ஆற்றை ஒட்டி ஏறக்குறைய 20 கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் செப்பாக்கம். ஒருகாலத்தில் பல குடும்பங்கள் வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது 56 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. சாம்பல் கழிவுகளாலும், தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகளாலும் இந்த இடத்தில் வாழ்வதே கடினமாக இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மழைக்காலத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் தனித்து துண்டிக்கப்பட்டுவிடும் என்றும் மனிதர்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இங்கு வாழ்ந்துவருவதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளிப்படிப்பிற்கே பல கிலோமீட்டர் பயணப்படவேண்டிய நிலையில், பல நிறுவனங்கள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில் வேலைவாய்ப்பும் இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளை உரத்து சொல்லி வந்தாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதுதான் இவர்களின் குமுறலாக இருக்கிறது.