கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி பரும் நிலையில், தலைமை பொறியாளர் அசோகன் ஆய்வு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
கடந்த ஒரு சில தினங்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளும் மற்ற சிறு ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற பொறியாளர் ஏரியின் கொள்ளளவு, நீர்வரத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ஏரியின் 19 கண் மதகு மற்றும் 5 கண் மதகுகள் ஆகியவை பராமரிப்புடன் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 615 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி நீரில் 1103 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இது 30 சதவீத நீர் ஆகும், தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பும். ஏரி முழு கொள்ளளவை எட்டினால் அதற்கான தடுப்பு நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.