கோவையில் சிறுமிக்கும், சிறுவருக்கும் நடந்த திருமண நிச்சயம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை வேடப்பட்டி அடுத்த நாகராஜபுரம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் ஒருவரது வீட்டில் திருமண நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. நேற்றிரவு திருமணம் நடைப்பெற இருந்த நிலையில், அதே சமூகத்தை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு, திருமண வயது பூர்த்தி ஆகாத சிறுமிக்கும், சிறுவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் வடவள்ளி காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில் அனைத்தும் சரியாக இருந்ததை தொடர்ந்து திருமணம் நடத்த ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அதேப் பகுதியில் மற்றொரு வீட்டில் 17 வயதுடைய சிறுமிக்கும், சிறுவருக்கும் திருமண நிச்சயம் நடைப்பெற்றதை அறிந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதற்கு நிச்சயம் நடைப்பெற்றது உண்மை என்றும், ஆனால் திருமணம் 6 ஆண்டுகளுக்குப் பிறகே நடைப்பெறவுள்ளதாகவும் பெற்றோர் கூறினர். பின்னர், பெற்றோரை சமூக நலத்துறை அலுவலகம் வந்து கடிதம் எழுதிதரச் சொல்லிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.