தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஜெகத்ரட்சகனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை

webteam

சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ.65 கோடிக்கு சொத்து வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினர்.

சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வாங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத வகையில், 65 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து ஜெகத்ரட்சகன் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய பிறகு அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மன்படி ஜெகத்ரட்சகன் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சட்ட விரோத பணத்தை அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சமாக கொடுத்ததாகவும் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.