வேலூர் காட்பாடி, காந்தி நகரில் தமிழக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது.இதே வீட்டில்தான் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தும் வசித்து வருகிறார்.இங்கு இன்று காலை முதலே 4 வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார். சோதனையின்போது, அமைச்சர் துரைமுருகனும், எம்.பி கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என்பதால் கிட்டதட்ட 2 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டின் முன்பு திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர்.
இதனையடுத்து பேசிய அமைச்சர், ”யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன். சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கீழ்மோட்டூரில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர்.
மக்களவை தேர்தலின்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ.11 கோடியை ஐ.டி. துறை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுத்தொடர்பாகதான் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது