தமிழ்நாடு

காலி மருத்துவர் பணியிட வழக்கு: விபரங்களைத் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

காலி மருத்துவர் பணியிட வழக்கு: விபரங்களைத் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

webteam

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதில், சுமார் நூறு கிராம மக்கள் மருத்துவ தேவைகளுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையை சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கீழக்கரை, ஏர்வாடி ஆகிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மட்டும் 18 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதிக பணியிடங்கள் காலியாக இருப்பதால் பொதுமக்களுக்கு முறையான சிகிச்சையின்றி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட்ட மற்றும் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வ‌ழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது