கோவையில் பணியாளர்கள் இல்லாத பேக்கரியில், வாடிக்கையாளர்கள் உரிய பணத்தை வைத்துவிட்டு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கையானது 411 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருவேளை உணவுக்கே அல்லோல்படும் அவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் சில கடை உரிமையாளர்களும் குறைவான விலையில் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கோவையில் உரிமையாளரும் பணியாளர்களும் இல்லாத பேக்கரியில், வாடிக்கையாளர்களே உரிய பணத்தை வைத்துவிட்டு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற சுய சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் விக்னேஷ். இங்கு உரிமையாளரோ பணியாளர்களோ இல்லாத நிலையில் ரொட்டி பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு வரும் மக்கள் ரொட்டிக்கான பணத்தை அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு, பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். பணியாளர்கள் யாரும் இல்லாத கடையில், உரிய பணத்தை வைத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் ரொட்டியை எடுத்துச் செல்வது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.