தமிழ்நாடு

கருணைக் கொலைக்கு முன் உயிரிழந்த யானை: கண்ணீர் விட்ட ஐஏஎஸ் அதிகாரி

கருணைக் கொலைக்கு முன் உயிரிழந்த யானை: கண்ணீர் விட்ட ஐஏஎஸ் அதிகாரி

Rasus

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த யானை ராஜேஸ்வரி இன்று இயற்கையாகவே உயிரிழந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதுடைய ராஜேஸ்வரி என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு கடந்த 5-ம் தேதி முதல் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் யானை நிற்க முடியாமல் அன்று முதல் தொடர்ந்து படுத்தப் படுக்கையாக இருந்தது. இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த கால்நடை டாக்டர் மனோகரன், சேலம் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் லோகநாதன் மற்றும் சில கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

தினசரி குளூகோஸ், நரம்பு ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, தாது உப்புக்கள், களி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. யானைக்கு மூலிகை மற்றும் எண்ணெய் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், எழுந்து நிற்காமல் தொடர்ந்து படுத்துக்கொண்டே இருந்தது. இதனிடையே யானையின் முன் வலது பாதத்தில் திடீரென புழுக்கள் வைக்க ஆரம்பித்தது. இந்தப் புழுக்கள் பாதத்தில் மேலும் பரவியது. நோய் தீவிரமடைந்ததால் யானை மிகவும் அவதிப்பட்டு வந்தது.

எனவே யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சென்னை கோட்டூர் கார்டன்ஸ் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கியது. பின், யானையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்தனர். எனவே கருணைக் கொலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் யானை இன்று இயற்கையாகவே உயிரிழந்தது. இன்று பிற்பகல் யானை ராஜேஸ்வரி உயிரிழந்ததையடுத்து, சுகவனேஸ்வரர் கோயில் நடை சாத்தப்‌பட்டது. தகவலறிந்த பக்தர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானை ராஜேஸ்வரிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணியும் மாலையணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். உடன் மாநகர காவல்துறை ஆணையர்  சுப்புலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.