நீலகிரி மாவட்டம் உதகை வழியே சென்ற அரசு பேருந்தை காட்டுயானைகள் வழிமறித்ததை பேருந்தில் பயணித்த நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் இந்த பாதை சுமார் 48 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. யானைகள் மட்டுமின்றி சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளும் கெத்தை வனப்பகுதியில் உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் ஒருவித அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் உதகை நோக்கி அரசு பேருந்து பயணித்த போது சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருந்துள்ளன.அப்போது பேருந்தை கண்ட யானைகள் துரத்த முற்பட்டதால் ஓட்டுனர் பேருந்தை பின்புறமாக இயக்கி நிறுத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானைகள் சாலையிலேயே சுற்றியதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
பேருந்தை யானைகள் வழிமறித்ததை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.