தமிழ்நாடு

ஓசூர் அருகே யானைகள் தஞ்சம் ! பீதியில் கிராம மக்கள்

ஓசூர் அருகே யானைகள் தஞ்சம் ! பீதியில் கிராம மக்கள்

webteam

ஓசூர் சானமாவு வனப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் அருகே கத்திரேபள்ளி கிராமத்தில் நேற்று குட்டிகளுடன் 12 யானைகள் தஞ்சமடைந்து சுற்றி வந்தது. இந்நிலையில் சுமார் 5 மணி நேரம் போராடி 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அருகில் உள்ள பேரண்டபள்ளி வனபகுதிக்கு யானைகளை விரட்டினர். ஏற்கெனவே பேரண்டப்பள்ளி வனபகுதியிலிருந்த 12 யானைகளும் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து போடுர் வனப்பகுதிக்கு சென்றது. மேலும் சானமாவு வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்திருக்கும் 9 யானைகளுடன், அதே பகுதியில் தற்போது மேலும் 12 யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மேலும் இந்த யானைகளை ஒன்றிணைத்து நாளை அல்லது நாளை மறுநாள் தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது யானைகள் வனப் பகுதியில் சுற்றி திரிவதாலும், இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களில் நுழையும் என்பதாலும் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் வனப் பகுதியை சுற்றியுள்ள சானமாவு, போடுர், ராமாபுரம், நாயக்கன் பள்ளி, பீர்ஜெப்பள்ளி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் யாரும் வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும்படியும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.